×

மாநகரில் ‘போலி ஹெல்மெட்’ விற்பனை அதிகரிப்பு

கோவை, மார்ச்.4:  கோவை மாநகரில் ‘போலி ஹெல்மெட்’ விற்பனை அதிகரித்து வருவதால் அதை வாங்கி பயன்படுத்தும் வாகன ஓட்டிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. கோவையில் மோட்டார் வாகனங்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில், குறிப்பாக இரு சக்கர வாகனங்களின் பயன்பாடு உயர்ந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி கோவையில் இரு சக்கர வாகனங்கள் 20 லட்சத்துக்கும் மேல் உள்ளன.‘ பல வாகன ஓட்டிகள் ‘ஹெல்மெட்’ அணியாமலும், மது குடித்துவிட்டும், மொபைல் போன்களில் பேசிக்கொண்டும், ஒருவழிப்பாதையில் பயணிப்பதும் ேபான்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனால் விபத்துகள் ஏற்பட்டு பல உயிரிழப்புகள் நிகழ்கின்றன. விபத்துக்களை கட்டுப்படுத்த மாநகர போலீசார் ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகளை பிடித்து அவர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர்.

போலீசாரின் கெடுபிடிகளால் பெரும்பாலாேனார் ‘ஹெல்மெட்’டுகளை பயன்படுத்த துவங்கி விட்டனர். இதன் காரணமாக கோவையில் உள்ள ‘ஹெல்மெட்’ விற்பனை கடைகளில், விற்பனை அதிகரித்துள்ளது. மாநகரின் பல இடங்களில் சாலையோரங்களில்கூட விற்பனை நடக்கிறது. ஆனால் இதில் பெரும்பாலான ஹெல்மெட்கள் தரமற்றவையாக இருக்கின்றன. அரசு ‘ஐஎஸ்ஐ’ முத்திரை கொண்ட தலைகவசத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என கூறியிருப்பதால், அதுபோல போலியான முத்திரை சில ‘ஹெல்மெட்’களில் உள்ளது. இதை உண்மையென நம்பி பல வாகன ஓட்டிகள் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் இதை பயன்படுத்துவதால் விபத்து நேரத்தில் பாதுகாப்பு இருக்காது என போக்குவரத்துத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இது குறித்து போக்குவரத்துத்துறை அதிகாரிகள் கூறுகையில், விபத்தின்போது 80 கிலோ எடை கொண்ட ஒருவர் கீழே விழும்போது 800 முதல் 1,600 கிலோ வேக பலத்தில் விழுவார். 800 கிலோ வேக பலம் தாக்கினாலே மனித மண்டையோடு உடைந்துவிடும்.

இதனால் மூளை நரம்புகள் பாதிக்கப்பட்டு இறக்கும் நிலை ஏற்படும். எனவே இதைவிட பல மடங்கு அதிக பலம் தலையை தாக்கினாலும், அதை தடுக்கும் வேலையை  ‘ஹெல்மெட்’ செய்கிறது. இதை ‘ஐஎஸ்ஐ’ தரம் கொண்ட ‘ஹெல்மெட்’டால் மட்டுமே செய்ய முடியும். இந்தியாவில் தயாரிக்கப்படும் தரமான ‘ஹெல்மெட்’டுக்கு ‘பீரோ ஆஃப் இந்தியன் ஸ்டாண்டர்ட்’ எனும் பி.ஐ.எஸ் நிறுவனம் தரச்சான்றிதழ் கொடுக்கிறது. அதன்கீழ் வரும் ஐஎஸ் 4151 பிரிவில்தான் ‘ஹெல்மெட்’டின் தர விதிகள் உள்ளன. இதன்படி ஏபிஎஸ் என்று சொல்லப்படும் ஒருவகை உயர் தரமுடைய பிளாஸ்டிக் பொருளை மேல்பகுதியாக பயன்படுத்த வேண்டும். அதன் இடைபட்ட பகுதியில் அதாவது நடுப்பகுதியில் அடர்த்தியான தெர்மாகோல் இருக்க வேண்டும். இதுதவிர சின் ஸ்ட்ராப் எனப்படும் தாடை நாடா எவ்வளவு இருக்க வேண்டும், தலைக்கு ஏற்ற மாதிரி என்ன வடிவத்தில் உட்புறம் இருக்க வேண்டும் என்பது எல்லாம், அந்த விதியில் இருக்கிறது. இந்த ‘ஹெல்மெட்’களில் ஐஎஸ்ஐ முத்திரையுடன் கூடவே ஐஎஸ் 4151 என்ற குறியீடும் குறிப்பிடப்பட்டிருக்கும்.

இந்த விதிகளுக்கு மாறாக சிமென்ட், பேப்பர் கூழை இறுக வைத்து தயாரிக்கப்படும் ஹெல்மெட் விலை மலிவாக சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் அதிக பாதிப்பை தாங்கக்கூடிய அடர்த்தியான தெர்மாகோலுக்கு பதிலாக தடிமன் இல்லாத தெர்மாகோல் பயன்படுத்தப்படுகிறது. இதை பயன்படுத்துவதால் எவ்விதமான பலனும் ஏற்படாது. எனவே தரமான ‘ஹெல்மெட்’டுகளை மட்டுமே வாங்கி பயன்படுத்த வேண்டும். அதேபோல் தலையின் அளவுக்கு ஏற்ப சரியாக ஃபிட் ஆகும் ‘ஹெல்மெட்’டை மட்டுமே வாங்க வேண்டும். லூசாக இருந்தால் அடிபடும்போது தலைக்கு பாதிப்பு ஏற்பட்டுவிடும். மேலும் சதுரம், கூம்பு போன்ற வடிவங்களை கொண்ட ‘ஹெல்மெட்’களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். ரவுண்டாக இருந்தால் மட்டுமே பாதிப்பு குறைவாக இருக்கும். அணியும்போது ஒருவிரல் அல்லது இருவிரல் மட்டும் செல்லக்கூடிய அளவில் நாடாவை அணிந்துகொள்ள வேண்டும். மேலும் லாக்குகளும் சுலபத்தில் விலகி விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : City ,
× RELATED ஊட்டி நகர் பகுதியில்...